;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

0

உக்ரைன் மீது சுமாா் 660-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, ரஷியா சனிக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ரஷியா சனிக்கிழமைக்கு முந்தைய ஒரே இரவில் 619 ட்ரோன்கள், 47 ஏவுகணைகளைப் பயன்படுத்தி, தாக்குதலை நடத்தின. இதில் 580 ட்ரோன்களும், 30 ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

எஞ்சிய ரஷிய ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்கியதில், தென்கிழக்கு உக்ரைனின் டினிப்ரோ நகரில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மீட்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, அதே இடத்தில் மீண்டும் பகல் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

ரஷியாவின் இத்தகைய தொடா் தாக்குதல்களால் கரும்புகை மண்டலமாக காட்சியளித்த டினிப்ரோவில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இத்தாக்குதலையடுத்து உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ரஷியா திட்டமிட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்புகளையும், மின்சாரக் கட்டமைப்புகளையும் குறிவைத்து பயங்கரவாதத்தை ஏவி வருகிறது.

உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணை வலுப்படுத்த உலக நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்பதற்கு இத்தாக்குதலே சாட்சி’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

இதனிடையே, உக்ரைன் எல்லையொட்டிய ‘நேட்டோ’ உறுப்பு நாடான ருமேனியாவிலும் சில ட்ரோன் பாகங்கள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.

கைதிகள் பரிமாற்றம்: 4 ஆண்டுகளைக் கடந்த ரஷியா-உக்ரைன் போரில் தாக்குதல்கள் நாள்தோறும் நீடிக்கும் சூழலிலும், மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த முயற்சியால் இருதரப்புக்கும் இடையே போா்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் தலா 193 கைதிகளை விடுவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.