சுவிஸ் விமானத்தில் தீ விபத்து: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு: வீடியோ
டெல்லி விமான நிலையத்தில் சுவிஸ் விமானம் ஒன்றின் இஞ்சினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுவிஸ் விமானத்தில் தீ விபத்து
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை சுமார் 1.08 மணியளவில் சூரிச்(Zurich) நோக்கி புறப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
LX147 என்ற எண் கொண்ட ஏர்பஸ் A330(பதிவு எண்: HB-JHK) விமானம் 4 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 228 பயணிகளுடன் ஓடுதளத்தில் தயாராக இருந்தது.
விமானம் ஓடுதளத்தில் இருந்து வேகமெடுத்த சில நொடிகளிலேயே அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு என்ஜினில் தீ பிடித்தது.
இதையடுத்து நிலைமையை உணர்ந்த விமானி உடனடியாக விமான பயணத்தை கைவிட்டு, ஓடுதளத்திலேயே விமானத்தை பாதுகாப்பாக நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து விமான நிலைய பணியாளர்கள் உடனடியாக மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். மேலும் பயணிகள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற அவசரகால சரிவுப் பாதைகளை ஏற்படுத்தினர்.
6 பயணிகளுக்கு காயம்
விமானத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தில் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால், விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறிய போது 6 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 6 பயணிகளும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கான விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அத்துடன் சுவிட்சர்லாந்து செல்ல வேண்டிய பயணிகளுக்கான மாற்று விமானங்களை ஏற்பாடு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.