;
Athirady Tamil News

விஜய்யை பாராட்டியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ – தவெகவில் இணைவா?

0

தவெக விற்கு ஆதரவு தெரிவித்த காமராஜ் எம்எல்ஏ அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விஜய்யை புகழ்ந்த காமராஜ்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ்

அதைத்தொடர்ந்து விஜய் ஆட்சியமைக்க திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வந்த நிலையில், அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவளித்து கடிதம் எழுதியாக வீடியோ வெளியானது.

ஆனால் அந்த வீடியோ போலி எனவும், தனது எம்எல்ஏவை கடத்தி விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தான் அந்த கடிதத்தை கொடுக்கவில்லை என டிடிவி தினகரன் மற்றும் எம்எல்ஏ காமராஜ் பேசினர்.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசினர்.

இதில் பேசிய எம்எல்ஏ காமராஜ், “தமிழ்நாட்டு முதலமைச்சர் முதலில் அறிவித்த மூன்று திட்டங்களும் மக்களுக்கு உதவும் திட்டங்கள். முதலமைச்சர் விஜய் ஐந்தாண்டு கால சிறப்பான ஆட்சியை தர வேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்

இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். கடந்த காலத்தில் ஏதேனும் பேசியிருந்தால், அது அன்றைக்கிருந்த அரசியல் சூழலில் பேசியது. தவெக. தலைமையிலான அரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அமமுகவில் இருந்து நீக்கம்
இந்நிலையில், காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது எனக்கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

காமராஜ் விளக்கம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காமராஜ் எம்எல்ஏ, “கடந்த 10 ஆண்டுகாலமாக அமமுகவிற்கு உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசாக கட்சியிலிருந்து நீக்கத்தை எடுத்துக்கொள்கிறேன். தலைமை முடிவு எடுக்கும்போது கட்டுப்பட்டுத்தான் ஆகணும். ஒன்றும் வருத்தமில்லை.

சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சரை புகழ்ந்து பேசுவது தவறா? நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க போகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தவெகவில் இருந்து அழைப்பு வந்தால், காமராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.