;
Athirady Tamil News

அஸ்வெசும திட்டத்தில் புதிய மாற்றம் ; அரசின் முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் அந்தக் குடும்பங்களை படிப்படியாக நலன்புரி கொடுப்பனவுகளில் இருந்து விடுவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, மக்களை நீண்டகால நலன்புரி உதவிகளில் தங்கவைக்காமல், தற்சார்பு பொருளாதார நிலைக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம் என தெரிவித்தார்.

அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கான காலக்கெடு, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், பல குடும்பங்களின் வருமானம் இன்னும் போதுமான அளவில் உயராததால், உடனடியாக உதவித்தொகையை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது முன்னேற்றம் கண்டுள்ள குடும்பங்களுக்கு சுயதொழில் உதவித்தொகைகள், கோழிப் பண்ணை அமைப்பதற்கான ஆதரவு, ஜப்பானிய மொழி பயிற்சி மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

‘அஸ்வெசும’ திட்டம் 2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இடைக்காலப்பிரிவு, பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் என நான்கு பிரிவுகளின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தகுதியான சில ஏழைக் குடும்பங்கள் இன்னும் பட்டியலில் சேர்க்கப்படாதது மற்றும் தகுதியற்ற சிலர் திட்டத்தில் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக முறைப்பாடுகளும் எழுந்துள்ளன.

மேலும், சில பயனாளிகள் உதவித்தொகையை வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்தாமல், தேவையற்ற செலவுகளுக்காக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான குடும்பங்களை சொந்தக் காலில் நிற்கச் செய்வதே அரசின் இறுதி இலக்காகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.