;
Athirady Tamil News

சுமந்திரனின் தவறான ஆட்சேபனை – வழக்கு செலவாக 10ஆயிரம் செலுத்த உத்தரவு ; மேன்முறையீடு செய்யவுள்ள சுமந்திரன்.

0
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பதில் செயலாளர் எம், ஏ சுமந்திரன் ஆகியோருக்கும் யாழ் . மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
குறித்த கட்டளைக்கு எதிராக தான் மேன்முறையீடு செய்யவுள்ளதாக எம்,ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்துவதாக உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை குறித்த உறுப்பினர் சவாலுக்கு உட்படுத்தி,  சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்ற  மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது மன்றில் தோன்றிய தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ கே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  தமிழரசுக் கட்சியின் தலைவராலும் செயலாளராலும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் தவறானது எனக் கூறி தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தலா பத்தாயிரம் ரூபாயை குறித்த ஆட்சேபனையை எழுப்பியதற்கான வழக்குச் செலவாக செலுத்த வேண்டுமென கட்டளையிட்டுள்ளது.

அதனை அடுத்து வழக்கினை ஜூலை மாதம் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

குறித்த கட்டளை தொடர்பில் எம்.ஏ சுமந்திரனிடம் ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது , குறித்த கட்டளைக்கு எதிராக மேன் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.