;
Athirady Tamil News

தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையிலே அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள் – யாழில். டில்வின் தெரிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தி, இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில், தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையிலே, மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்று, தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட தமிழ் தலைமைகளை நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்திருக்கின்றோம்.

அவர்கள் வடபகுதி மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கோ, இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கோ அல்லது பொருளாதார மேம்பாட்டிற்கோ எந்தவொரு நிலையான தீர்வையும் பெற்றுத்தரவில்லை.

இன்று, இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரமும் மாற்றமடைந்து வருகின்றது. தென்னிலங்கை மக்கள் ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் பயணத்தை தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து தொடங்கியிருக்கின்றார்கள்.

அதே மாற்றத்தை, அதே புதிய அரசியல் யுகத்தை யாழ்ப்பாண மண்ணிலும் உருவாக்க வேண்டிய பொறுப்பு இங்குள்ள மக்களுக்கும் இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி, இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி, மற்றும் கல்வித்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தெளிவான பொருளாதாரத் திட்டங்களை எமது கட்சி நாடாளுமன்றத்தில் முன் வைத்து வருகிறது.

எனவே, இனியும் ஏமாற்று அரசியல்வாதிகளின் வெற்று முழக்கங்களை நம்பி ஏமாறாமல், உங்கள் எதிர்கால சந்ததியின் வாழ்வு சிறக்க, ஊழலற்ற, தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்திக்கு இங்குள்ள மக்களும் பெரும் ஆதரவை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.