சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து ; 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு
வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுரங்க விபத்தாக இது பதிவாகியுள்ளது. ஷான்ஸி மாகாணத்தின் சின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.
அப்போது மொத்தம் 247 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் 90 பேர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட சுமார் 123 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், மாயமான 9 பேரைத் தேடும் பணியில் 755க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சுரங்க நிறுவனத்தின் சில முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணத்தை முழுமையாக விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, துணைப் பிரதமர் ஜாங் குவோகிங் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்து வருகிறது.
சீனாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை சமாளிக்க நிலக்கரி சுரங்கங்கள் அதிக அளவில் இயங்கும் நிலையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இத்தகைய விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலங்களில் 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய சுரங்க விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.