;
Athirady Tamil News

குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது – பாக். பிரதமர் வேதனை

0

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் முக்கிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இங்குள்ள குவெட்டாவின் சாமன் பட்டாக் பகுதியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு ஒரு ரெயில் குவெட்டாவின் சாமன் பட்டாக் சிக்னல் அருகே வந்தது. அப்போது ரெயில் பெட்டியின் மீது கார் ஒன்று பயங்கரமாக வந்து மோதியது.

கார் மோதிய அடுத்த நொடியே அந்த பெட்டி வெடித்து சிதறியது. 2 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. ரெயில் தீப்பிடித்து எரிந்தது. வான் முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று 30 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ரெயில் மீது மோதியது தெரியவந்துள்ளது. இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் காரில் வெடிப்பொருட்களை ஏற்றி வந்து ரெயிலில் மோதி இந்த கோரத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

ராணுவ வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாட பெஷாவருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றனர். இதுபற்றி முன்கூட்டியே அறிந்த கும்பல் தான் இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பால் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டன. அருகில் இருந்த ஒரு அடுக்குமாடி கட்டத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது. சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிஎல்ஏ எனும் பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவினர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக அவர்கள் போராடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் இந்த பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி என்ற அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என அக்குழு அறிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது என பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

குவெட்டாவின் சமன் படக் அருகே நடந்த கொடூரமான குண்டுவெடிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வெடிப்பினால் ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் துயரமான முறையில் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.