தேசிய விருது ஆளுமைகளான றுத்றா அமிர்தரெத்தினம், வேட்டையன் இம்ரான் கூட்டு முயற்சியில் உதயமாகிறது ‘Cine Serendib’ சினிமா ஊடகத் தளம்!
இலங்கைத் திரைத்துறையின் செய்திகள் மற்றும் நடுநிலையான விமர்சனங்களை இரு மொழிகளிலும் கொண்டு சேர்க்க விசேட நடவடிக்கை
இலங்கைத் திரைத்துறையின் அதிகாரப்பூர்வச் செய்திகள் மற்றும் நடுநிலையான திரைப்பட விமர்சனங்களை இரு மொழிகளிலும் உலகெங்கும் வாழும் தமிழ் மற்றும் சிங்கள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ‘Cine Serendib’ என்ற புதிய பிரத்தியேக சினிமா ஊடகத் தளம் உத்தியோகபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் திரையுலகில் தங்களது தனித்துவமான கலைப் பங்களிப்பால் தேசிய மட்ட அங்கீகாரம் பெற்ற ஆளுமைகளான றுத்றா அமிர்தரெத்தினம் மற்றும் வேட்டையன் இம்ரான் ஆகியோரின் தொழில்முறை கூட்டு முயற்சியில் (Strategic Partnership) இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடாங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திற்குள் 3,000-ற்கும் மேற்பட்ட தீவிர சினிமா ரசிகர்களைத் தன்வசம் ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக வளர்ந்து வரும் முன்னணிச் சினிமா ஊடகமாக இது உருவெடுத்துள்ளது.
தேசிய விருதுகளுடன் பிராந்தியத்திற்குப் பெருமை சேர்த்த சாதனை
கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற ‘குவியம் தேசிய விருதுகள்’ (Kuviyam National Awards) விழாவில், மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக ஒரே ஆண்டில் இரண்டு பிரதான தேசிய விருதுகளை இந்த இரு சாதனையாளர்களும் வென்றிருந்தனர்:
றுத்றா அமிர்தரெத்தினம்: 2025ஆம் ஆண்டுக்கான குவியம் தேசிய விருதுகளில் ‘சிறந்த நடிகை’ (Best Actress) விருது வென்ற முன்னணி ஆளுமை.
வேட்டையன் இம்ரான்: அதே விழாவில் ‘சிறந்த நடிகர்’ (Best Actor) விருது வென்ற திறமையாளர்.
இலங்கைச் சினிமாவிற்கான பிரத்தியேக இருமொழிப் பாலம்:
முற்றிலும் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் சினிமாக்கள் சார்ந்த பிரத்தியேகச் செய்திகளை (Sri Lankan Sinhala & Tamil Cinema Updates) மட்டுமே இரு மொழி ரசிகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்தளம் தனித்துவமாகச் செயல்படவுள்ளது. அனைத்துச் செய்திகளும் தமிழ் மற்றும் சிங்கள ஆகிய இரு மொழிகளிலும் உடனுக்குடன் பிரசுரிக்கப்படும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இது குறித்து நிறுவனர்களான றுத்றா அமிர்தரெத்தினம் மற்றும் வேட்டையன் இம்ரான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
“இலங்கையின் தமிழ் மற்றும் சிங்களச் சினிமாக்களில் அபாரமான திறமையாளர்களும் தரமான படைப்புகளும் அரங்கேறி வருகின்றன. எங்களது ‘சினி செரெந்திப்’ தளம், இந்த இரு மொழித் திரை உலக நகர்வுகளையும், கலைஞர்களின் சாதனைகளையும் நடுநிலையான செய்திகள் மற்றும் துல்லியமான விமர்சனங்கள் மூலம் சர்வதேச அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் முதன்மைப் பாலமாகத் திகழும்.”
என்று தங்களது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேசிய விருது வென்ற நடிகர்களாக மட்டுமல்லாமல், ஒரு வெற்றிகரமான ஊடக நிறுவனர்களாகவும் தடம் பதிக்கும் றுத்றா அமிர்தரெத்தினம் மற்றும் வேட்டையன் இம்ரான் ஆகியோரின் இந்த புதிய ஊடக முயற்சிக்குத் திரைத்துறையினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
