கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு
உத்தர கன்னடா: கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகாவில் உள்ள ஷிராலி கிராமத்தின் அருகே தட்டே ஹக்கலு ஆறு ஓடுகிறது. ஆற்றோரம் வாழும் மக்களின் வாழ்வாதாரத் தொழில் ‘நன்னீர் சிப்பிகளை’ சேகரிப்பது ஆகும். இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் நேற்று ஆற்றுக்குள் இறங்கி, சிப்பிகளைத் தேடி ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஒன்று அல்லது இரண்டு பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்களும் ஆற்றில் குதித்தபோது, பலத்த நீரோட்டம் காரணமாக அவர்களும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், போலீஸார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 7 பெண்கள் உட்பட 8 பேரின் உடல்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.