;
Athirady Tamil News

மூளைக் காய்ச்சல்: வீணான அச்சம் தேவையில்லை!

0

தென் மாகாணத்திலுள்ள மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட கடும் காயச்சலுடனான நோய் தற்போது நாட்டின் வேறு சில பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சும் மருத்துவ துறையினரும் விஷேட கவனம் செலுத்தியுள்ளனர்.

தெனியாயவில் அமைந்திருக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் தான் கடும் காய்ச்சலுடனான சில அறிகுறிகளைக் கொண்ட இந்நோய் முதலில் கடந்த மாதம் அடையாளம் காணப்பட்டது. அங்கு சுமார் 50 பேரளவில் இக்காய்ச்சலுக்கு உள்ளாகினர். இத்தகைய அறிகுறிகளுடன் நோயாளர்கள் பதிவாகத் தொடங்கியதும் சுகாதார அமைச்சு விஷேட கவனம் செலுத்தி நிபுணத்துவ மருத்துவர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவினர் மாகாண சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்நோய்க்கான மூல காரணி தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் இது வைரஸ் மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்குரிய சிகிச்சைகள் வைத்தியசாலைகளின் ஊடாக இந்நோயாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதன் ஊடாக தெனியாய பிரதேசத்தில் இந்நோயின் பரவுதல் வீழ்ச்சி கண்டது. இது ஆறுதலான செய்தியாகப் பரவிய வேளையில் தியத்தலாவ, வெளிமடை, கண்டி, ரிகில்லகஸ்கடல்ல ஆகிய பிரதேசங்களிலும் தெனியாய பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்பட்ட அறிகுறிகளைக் கொண்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். தியத்தலாவயில் 25 பேரும் வெளிமடையில் 25 பேரும் ரிகில்லகஸ்கடல்லவில் 13 பேரும் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் நோய் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலும் இந்நோய்க்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர். இங்குள்ள சிறைக் கைதியொருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 17 காய்ச்சல் நோயாளர்களில் இருவருக்கு மூளைச்சவ்வு அழற்சி நோய் இருப்பது சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் சுமார் 20 பேர் சந்தேகத்திற்கிடமான நோய் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இச்சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். அவர் மூளைச்சவ்வு அழற்சியால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுவதால், இது தொடர்பில் விரிவான விசாரணையை சுகாதார அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் பாலித கருணபிரேம, இந்த மூளைக்காய்ச்சலுக்கு இற்றை வரையும் சுமார் 116 பேர் உள்ளாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மருத்துவ நிபுணர்களும் மாகாண சுகாதார அதிகாரிகளும், இந்நோய் தொடர்பில் விரிவான ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் இந்நோய்க்கான வைரஸ் வகை தொடர்பில் தொடரான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அத்தோடு இந்நோய் தொடர்பான கள ஆய்வுப் பணிகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இவ்வாறான சூழலில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகப் பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, ‘மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ள வைரஸ் மூளைக்காய்ச்சல் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அந்த வைரஸ் பரவும் முறையைக் கண்டறிவதற்கும், வைரஸ் நிபுணர்கள் மற்றும் நோய்ப்பரவல் நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவொன்றை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. அவர்கள் நோய் பரவும் விதத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளரான டொக்டர் அனில் ஜாசிங்க, நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ள கடும் காய்ச்சலுடனான நோய் மூளைக்காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூளைத் தண்டுவட திரவ (cerebrospinal fluid) மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகள் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஆக இந்நோய்க்கு உள்ளானவர்கள் மத்தியில் கடும் காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், மயக்கம், கழுத்தைத் திருப்புவதில் சிரமம், சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பதில் அசௌகரியம் போன்றவாறான அறிகுறிகள் முக்கியமாக அவதானிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் போது 6 முதல் 8 நாட்களுக்குள் நோய் குணமடைந்துவிடும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால் இத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் உயிராபத்து மிக்க நெருக்கடிகளுக்கும் கூட முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நோய்க்கு உள்ளான எவரும் இற்றை வரையும் மோசமான கட்டத்தை அடையவில்லை. சகல நோயாளர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் நோய் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

எனினும் இந்நோய்க்கான காரணி அசுத்தமடைந்த நீர், உணவு ஊடாக பரவுவதாக நம்பப்படுகின்ற அதேநேரம், நோய்க்கு உள்ளானவருடன் நெருங்கிய தொடர்பு (Close contact) மற்றும் எச்சில் துளிகள் மூலமும் இவ்வைரஸ் தொற்றலாம் எனவும் கூறப்படுகிறது. வாய்வழி, நீர் அல்லது உணவு மூலம் இவ்வைரஸ் பரவக்கூடும் என்று சந்தேகம் நிலவினாலும், அது பரவும் சரியான வழிகளை உறுதிப்படுத்தவென மேலதிக ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளார் பிரதியமைச்சர் ஹன்சக.

அதனால் இந்நோயைக் கட்டுப்படுத்தவென அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் இத்தகைய பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியமானவை. சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இந்நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். பிரதேச மட்ட மருத்துவ அதிகாரிகளும், பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இந்நோய் தொடர்பில் அறிவூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். பாடசாலை மடடத்திலும் இந்நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெறுகிறது. தெனியாய பகுதியிலுள்ள நீர் ஆதாரங்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுகாதார அமைச்சு, நாட்டின் சில பகுதிகளில் மூளைக்காய்ச்சல் நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதால், பொதுமக்களை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதோடு விசேட வழிகாட்டுதல் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

அவற்றில், நோயைக் கண்டறிதல், வகைப்படுத்தல், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொதுச் சுகாதார நடைமுறைகள், பாடசாலைக்கான நடைமுறைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வக சோதனைகள், மருத்துவ நடைமுறைகள், சமூக அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், திருவிழா மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் போன்றவையும் அடங்கியுள்ளன.

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவுதல். இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை முழங்கையால் அல்லது கைக்குட்டை அல்லது திசுவால் மூடிக் கொள்ளல், இந்நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்துக் கொள்ளல், வீடுகளில் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்தல் போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்தநோய் பரவுவதைத் தடுப்பதன் மூலம் கொதித்தாறிய பாதுகாப்பான நீரை மாத்திரம் அருந்துவதிலும் முகக்கவசங்களை முறையாக அணிந்து முகத்தை மூடிக்கொள்ளுவதிலும் மக்கள் நெரிசல்மிக்க பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய மழைக்காலநிலை மற்றும் எதிர்வரும் வெசாக் பண்டிகையையொட்டிய அன்னதான சாலைகளும் இந்நோய் மேலும் பரவக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தொற்று நோயியல் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே மூளைக்காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சும் மருத்துவ அதிகாரிகளும் வழங்கும் அறிவுரை, ஆலோசனை வழகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பு என்றால் அது மிகையாகாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.