மூடிய சூட்கேசுக்குள் சிக்கிய மர்மம் ;14 சீன நாட்டவர்கள் கைது
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன நாட்டவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூடிய சூட்கேசுக்குள் சிக்கிய மர்மம்
சந்தேகநபர்களின் பயணப்பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போதே 14 பயணப்பொதிகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட 691 கார்டன் சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் மொத்தம் 138,200 சிகரெட் துண்டுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் மொத்தப் பெறுமதி 27 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 14 சீனப் பிரஜைகளிடமும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.