பெற்றோரை தேடி கொழும்புக்கு… நீதிமன்றம் போகும் ஹட்டன் சிறுவன் விவகாரம்
பெற்றோரை தேடி கொழும்புக்கு புறப்பட்ட ஹட்டன் சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், கொழும்புக்குத் தனியாகப் பேருந்தில் செல்ல முயன்ற போது ஹட்டன் பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று (27) பத்திரமாக மீட்கப்பட்டு ஹட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பெற்றோரை தேடி கொழும்புக்கு…
ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) பேருந்து நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான மற்றும் சமயோசித செயலினாலேயே இந்தச் சிறுவன் பெரும் ஆபத்துகளில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பேருந்து மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக சிறுவன் பேருந்து நிலைய நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குக் பணம் கொடுத்ததாகவும் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்
7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பேருந்தில் ஏற அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகளிடம் அச்சிறுவன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து ஹட்டன் காவல் நிலைய உயர் அதிகாரி தெரிவிக்கையில் காவல்துறை பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர், சிறுவனின் முறையான பெற்றோரை அல்லது பாதுகாவலர்களைக் கண்டறிந்து அவர்களிடம் சிறுவனைப் பத்திரமாக ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்