;
Athirady Tamil News

அவதூறு பரப்பியமை ; எம்பி அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும் பரப்புரைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்து, தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியர் குறித்த வழக்கை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம் மற்றும் YouTube தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, எதிர் மனுதாரர் தரப்பு சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் கட்டளைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இந்த வழக்கில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் ஆஜராகியிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.