ரகசியமாக அடக்கம் செய்யப்பட்ட உடலம்; தோண்டி எடுத்த பொலிஸார்
குடும்பத் தகராறு காரணமாக மாமனார் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருமகன் உயிரிழந்துள்ளார்.
எனினும், அவரது மரணம் குறித்துப் பொலிஸாருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ எவ்வித அறிவித்தலையும் வழங்காமல், உறவினர்கள் சடலத்தை வைத்தியசாலையிலிருந்து கொண்டு வந்து இரகசியமாக அடக்கம் செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுடன் தோண்டி எடுக்கப்பட்ட சடலம்
இது குறித்துக் கொஸ்கொட பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே, நீதிமன்ற உத்தரவுடன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட, தூவேமோதர, இலக்கம் ஏ-68, ரஜமஹா விகாரைக்கு முன்பாகவுள்ள பொல்வத்தை வீதியை சேர்ந்த எதிரிமான்னராலாகே சிந்தக எதிரிமான்ன (வயது 49) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நீண்டகால குடும்ப தகராறு காரணமாக, உயிரிழந்த மருமகனுக்கும் அவரது மாமனாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் முற்றவே, இருவரும் தடிகளால் பரஸ்பரம் தாக்கிக்கொண்டுள்ளனர். இதன்போது, மாமனார் பலமாகத் தாக்கியதில் மருமகன் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆயினும், உயிரிழந்த நபரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், இக்கொலைச் சம்பவம் குறித்துப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்காமல் சட்டவிரோதமாகச் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்பாடுகளின்றி அடக்கம் செய்துள்ளனர்.
சடலத்தைத் தோண்டி எடுத்த பொலிஸார், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக அதனை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.