;
Athirady Tamil News

தீவிரமடையும் எல் நினோ ; இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்

0

நாட்டில் தற்போது ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு, முன்னர் 63% ஆக இருந்த சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80% ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ நிலைமை ஏற்படுமாயின், எதிர்வரும் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாட்டில் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, எல் நினோ தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் தற்போது தீவிர வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டுப் பகுதியில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகச் சரிவடைந்துள்ளது.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஆரம்பித்துள்ள எல் நினோ நிலைமை, தற்போது உலகம் முழுவதும் பல காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன.

இதுவரை பதிவான மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது உருவெடுக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.