அமெரிக்காவின் 250-வது சுதந்திரதின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த டிரம்ப்
வாஷிங்டன்,
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினவிழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற பிரமாண்ட அரசியல் பேரணியில் ஜனாதிபதி டிரம்ப் முறைப்படி இந்த விழாவைத் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை முன்பாக உள்ள தேசியப் பூங்காவில் 16 நாட்கள் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு திருவிழா அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியது.
வெள்ளை மாளிகை முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், “நாம் நமது 250-வது சுதந்திர ஆண்டின் விளிம்பில் நிற்கிறோம். அமெரிக்கா மீண்டும் கம்பீரமாக மீண்டெழுந்துள்ளது என் பதை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று முழங்கினார்.
இந்தத் தொடக்க விழாவில் அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்களின் கண்கவர் வான் சாகசங்கள் நடத்தப்பட்டன. மேலும், ராணுவ இசைக்குழுக்களின் இசையமைப்பும், பிரபல நாட்டுப்புறப் பாடகர் லீ கிரீன்வுட்டின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.