முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் அனைத்து புகையிரதங்களும் தரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்குக்கான புகையிரத சேவைகளை அதிகரித்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடற்றொழில், இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலில் குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள மாங்குளம் பிரதேசத்தில் உள்ள புகையிரத நிலையத்திற்கு சென்று, முல்லைத்தீவு , ஒட்டுசுட்டான் , மல்லாவி , துணுக்காய் ஆகிய பிரதேச மக்கள் தமது புகையிரத பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து புகையிரதங்களும் மாங்குளம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் என கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்படாத நிலையில் , இந்த அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாங்குளம் புகையிரத நிலையத்தில் , ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ள கூடிய வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தினையும் வினைத்திறனுடன் இயங்க செய்வதன் ஊடாக முல்லைத்தீவு மக்களின் வெளிமாவட்ட போக்குவரத்து வசதிகளை இலகுவாக்க முடியும் என்பதுடன் , முல்லைத்தீவுக்கு செல்வோருக்கான போக்குவரத்து வசதிகளையும் இலகுவாக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே மாங்குளத்தில் பன்முக போக்குவரத்து மையமொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட முறிகண்டி புகையிரத நிலையத்திற்கான வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இதனால் குறித்த புகையிரத நிலையத்திற்கு செல்லும் மக்கள் அங்கு செல்வதனை தவிர்த்து, அறிவியல் நகர் புகையிரத நிலையம் சென்று தமது புகையிரத பயணத்தை தொடர்கின்றனர்.
எனவே முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு செல்லும் வீதியினை புனரமைத்து , புகையிரத நிலைய சேவையை மேம்படுத்துமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.