;
Athirady Tamil News

CCTV காட்சியால் அம்பலமான கொலை மர்மம் ; 17 வயது சிறுமி பயணப்பொதியில் இருந்து உடலமாக மீட்பு

0

தாய்லாந்தின் பட்டாயா நகரில் 17 வயது சிறுமியின் சடலம் பயணப்பொதிக்குள் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஞ்சனோக் டோன்ஹோம்லா என்ற 17 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சனிக்கிழமை அதிகாலை தொடருந்துப் பாதைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பெரிய பயணப்பொதிக்குள் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சைமன் பீட்டர் கார்மன் என்ற அவுஸ்திரேலிய பிரஜை நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது, பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் போது ஆய்வு செய்யப்பட்ட கண்காணிப்பு (CCTV) காட்சிகளில், சந்தேகநபர் சிறுமியை ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றதும், பின்னர் அவர் மட்டும் பெரிய பயணப்பொதியுடன் வெளியே வந்ததும் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அந்தப் பயணப்பொதியை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று தொடருந்துப் பாதைக்கு அருகே கைவிட்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மீது கொலை, சடலத்தை மறைத்தல் மற்றும் சிறுமியை பாலியல் நோக்கத்திற்காக அழைத்துச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சந்தேகநபர், சம்பவம் தற்காப்பு நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகவும், அது தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலையில் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் அவரது தந்தை ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு சட்டத்தின் முழு கடுமையுடனும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவரது வளர்ப்புத் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாய்லாந்து காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.