;
Athirady Tamil News

தென் கொரியா: முதியவரின் கண்களிலிருந்து 11 உயிருள்ள புழுக்கள் அகற்றம் – மருத்துவர்கள் அதிர்ச்சி!

0

சியோல்,

தென் கொரியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்குச் சென்ற 71 வயது விவசாயி ஒருவரின் கண்களிலிருந்து 11 உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

பார்வைக் கோளாறு என நினைத்த முதியவர்

தென் கொரியாவின் சுஞ்சியோன் நகரைச் சேர்ந்த 71 வயது விவசாயி ஒருவர், கடந்த 2 மாதங்களாக கண்கள் சிவந்து போதல், மங்கலான பார்வை மற்றும் கண்களுக்குள் ஏதோ உருத்துவது போன்ற கடுமையான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் கண்புரை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நினைத்த அவர், அங்குள்ள காங்வோன் தேசிய பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

பரிசோதனையில் அதிர்ச்சி

அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்கள் அவரது கண்களைப் பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தனர். அவரது இரு கண்களின் இமைப் பகுதிகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஏதோ நெளிவதைக் கண்டறிந்தனர். நுணுக்கமாகப் பார்த்தபோது, அவை உயிருள்ள ஒட்டுண்ணிப் புழுக்கள் என்பது தெரியவந்தது.

11 புழுக்கள் மீட்பு

இதனைத் தொடர்ந்து, முதியவருக்கு மயக்க மருந்துகள் அளிக்கப்பட்டு, கண் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி இயூன் சாங் தலைமையிலான குழுவினர் நுண்துறடு என்ற கருவியின் உதவியுடன் புழுக்களை ஒவ்வொன்றாக அகற்றினர். சுமார் 11 மில்லிமீட்டர் முதல் 22 மில்லிமீட்டர் வரை நீளமுள்ள 11 உயிருள்ள புழுக்கள் அவரது கண்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன. இவை விலங்குகளைத் தாக்கக்கூடிய ‘தெலாசியா காலிபேடா’ எனப்படும் கீழைநாட்டு கண் புழுக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மனிதக் கண்ணில் இனப்பெருக்கம்

அகற்றப்பட்ட பெண் புழுக்களில் சில கர்ப்பமாக இருந்ததும், அவை மனிதக் கண்ணிற்குள்ளேயே முட்டையிட்டு லார்வாக்களை உருவாக்கும் நிலையை எட்டியிருந்ததும் மருத்துவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருத்துவர்கள் சரியான நேரத்தில் அவற்றை அகற்றாவிடில், புழுக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து முதியவரின் பார்வைக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

பொதுவாக நாய், பூனை மற்றும் நரிகளின் கண்களில் வாழும் இந்த புழுக்கள், அவற்றின் கண்ணீர் மற்றும் சுரப்புகளை உண்ணும் ஒரு வகை ஈக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகின்றன. விவசாயியான இந்த முதியவர், திறந்தவெளியில் வேலை செய்யும்போது இந்த ஈக்கள் மூலம் ஒட்டுண்ணித் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. புழுக்கள் முழுமையாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து முதியவர் கண் எரிச்சல் மற்றும் பார்வைக் கோளாறுகளிலிருந்து முற்றிலும் குணமடைந்து நலமாக உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.