யாழ்ப்பாணம் வலி. வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு எதிராக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் , பொன்னாலை – பருத்தித்துறை பிரதான வீதியில் , புதிதாக மதுபான சாலை ஒன்றினை நிறுவுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் , அதனை திறப்பதற்கான பூர்வாங்க வேலைகளை உரிமையாளர் முன்னெடுத்து வருகின்றார்.
குறித்த மதுபான சாலை அமையவுள்ள இடம் இன்னமும் மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்படாத இடமென்றும் , அதனை அண்மித்த பகுதியில் சமாதி கோயில்கள் உள்ளன என்றும் ,அத்துடன் குறித்த பகுதியில் பாடசாலை ஒன்று காணப்பட்டதாகவும் , அது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் காணப்படும் நிலையில் , அதனை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுப்பட்டு வருவதனால் , அப்பகுதியில் மதுபான சாலையை திறக்க அனுமதிக்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
அந்நிலையில் கடந்த மாதம் 08ஆம் திகதி குறித்த மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெல்லிப்பழை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து , அங்கிருந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று , மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என பிரதேச செயலரிடம் மகஜரும் கையளித்துள்ளனர்
இந்நிலையில் , குறித்த மதுபான சாலை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகளை அதன் உரிமையாளர் முன்னெடுத்து வரும் நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதுபான சாலை அமையவுள்ள இடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.