யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த இரு தசாப்தங்களாக சிறுவர் மருத்துவ விசேட வைத்திய நிபுணராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியர் அருள்மொழி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்நிலையில் , வைத்தியர் அருள்மொழிக்கான பிரியாவிடை வைபவம் யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்நிலையில் வைத்தியர் அருள்மொழியின் சேவையை பாராட்டி , யாழ்.போதான வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,
யாழ் மருத்துவ பீடத்தில் மருத்துவக் கல்வியைப் பயின்ற டாக்டர் அருள்மொழி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுநிலை மருத்துவ நிறுவனம் (Postgraduate Institute of Medicine – PGIM) இல் சிறுவர் மருத்துவத்தில் விசேட பயிற்சியை நிறைவு செய்து, தனது சொந்த மண்ணான யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி சிறுவர் மருத்துவ சேவையின் வளர்ச்சிக்காக அளப்பரிய சேவையாற்றினார்.
குறிப்பாக, போர் சூழ்நிலை நிலவிய மிகவும் சவாலான காலகட்டத்தில், வளங்களும் மனிதவளமும் குறைவாக இருந்த நிலையிலும், யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுவர் மருத்துவ சேவையை விரிவுபடுத்தவும், அதன் தரத்தை உயர்த்தவும், புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும், மருத்துவக் கல்வியை வலுப்படுத்தவும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
நோயாளி பராமரிப்பில் மட்டுமன்றி, சேவைத் திட்டமிடல், பிரிவு மேம்பாடு மற்றும் மருத்துவக் கல்வி ஆகிய துறைகளிலும் அவரது அர்ப்பணிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது.
மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலைப் பயிற்சி பெறும் இளம் சிறுவர் மருத்துவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து, பல திறமையான சிறுவர் மருத்துவ விசேட வைத்திய நிபுணர்களை உருவாக்குவதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது அறிவு, அனுபவம், ஒழுக்கம் மற்றும் மனிதநேய அணுகுமுறை பல தலைமுறை மருத்துவர்களுக்கு ஊக்கமளித்துள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுவர் மருத்துவ சேவை வட மாகாணத்தின் முக்கியமான மூன்றாம் நிலை மருத்துவ சேவையாக திகழ்கிறது. தற்போது நான்கு சிறுவர் மருத்துவ விடுதிகளில் ஐந்து சிறுவர் மருத்துவ விசேட வைத்திய நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.
அதனுடன், புதிதாகப் பிறந்த சிசுக்களுக்கான தீவிர சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக இரு சிசு மருத்துவ (Neonatology) விசேட வைத்திய நிபுணர்களும் சேவையாற்றுகின்றனர்.
மேலும், ஐந்து சிறுவர் மருத்துவப் பிரிவுகளில் ஒன்றாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிறுவர் மருத்துவப் பேராசிரியர் பிரிவும் பேராசிரியர் மற்றும் அவரது குழுவினரின் தலைமையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளர் பராமரிப்பு பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. மருத்துவ மாணவர்களுக்கும் முதுநிலைப் பயிற்சி மருத்துவர்களுக்கும் உயர்தரக் கல்வியை வழங்குவதில் இப்பிரிவு முக்கிய பங்காற்றி வருகிறது.
எதிர்காலத்தில் இணுவிலில் நிறுவப்படவுள்ள சிறுவர் வைத்தியசாலைக்கான காணியைப் பெற்றுத் தருவதிலும், யாழ் போதனா வைத்தியசாலையில் சிமுலேஷன் (Simulation) பயிற்சி மையம் உருவாக்கப்படுவதிலும் டாக்டர் அருள்மொழி அவர்கள் அளித்த அர்ப்பணிப்பும் முக்கியமான பங்களிப்பும் என்றும் நினைவுகூரத்தக்கதாகும்.
டாக்டர் அருள்மொழி அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பான சேவை, இன்று யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுவர் மருத்துவ சேவை பெற்றிருக்கும் உயர்ந்த நிலைக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. அவர் ஆற்றிய சேவைகள் வருங்கால மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக என்றும் நிலைத்திருக்கும்.
யாழ் போதனா வைத்தியசாலை சார்பில், டாக்டர் அருள்மொழி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியையும் உயர்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் சீமாட்டி வைத்தியசாலையில் தனது புதிய பொறுப்பிலும் இதே அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவையாற்றி மேலும் பல சாதனைகள் படைக்க எமது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை, அவரின் இடமாற்றத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப புதிய சிறுவர் மருத்துவ விசேட வைத்திய நிபுணர் ஒருவர் விரைவில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்க வருகிறார்.
இதன் மூலம் வட மாகாண மக்களுக்கான சிறுவர் மற்றும் சிசு மருத்துவ சேவைகள் தொடர்ந்தும் உயர்தரத்துடனும் இடையூறின்றியும் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை யாழ் போதனா வைத்தியசாலை கொண்டுள்ளது என தெரிவித்தார்.