அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: குவைத், பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ஈரான்!
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க பஹ்ரைன், குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் பஹ்ரைன் மற்றும் குவைத் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமைதி பேச்சுவார்த்தை முழுமையாக நிறுத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
கத்தாருக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனத்திற்காக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் கத்தார் மீது ஈரான் டிரோன், ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த 60 நாள்கள் அவகாசம் அளித்து இடைக்கால ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை முழுமையாக மீறப்படும் என்று இதுவரை இல்லாத அளவில் ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளியிட்ட தகவலில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அல் அசாத் விமானப்படை தளம் ஆகியவற்றின் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
“போர் நிறுத்தத்தை மீறுவது, நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை முழுமையாக நிறுத்திவிடும் என்பதை எதிரிக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று ஈரான் பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.