;
Athirady Tamil News

மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதித் திட்டம்!

0

மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேருக்கு விஷ மாத்திரை கொடுத்து கொல்ல முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் ரே ரோட்டில் உள்ள ரஹ்மதாபாத் மயானத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு ஃபயாஸ் பிரேம்ஜி என்பவர் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்றும், வலி நிவாரணிகள் என்றும் சில மாத்திரைகளை வழங்கினார். ஆனால், அவர் மீது சந்தேகித்த சில தன்னார்வலர்கள், பிரேம்ஜியிடம் மாத்திரைகள் ஏதும் வாங்க வேண்டாம் என ஒலிப்பெருக்கியில் அறிவிக்கவும் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரேம்ஜியின் நடவடிக்கை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரேம்ஜியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஊர்வலத்தில் பங்கேற்றோருக்கு பிரேம்ஜி விஷ மாத்திரை வழங்கியது தெரிய வந்தது.

இதுகுறித்து அவரிடம் மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எலிகளைக் கொல்லும் 50 கிலோ விஷ ரசாயனத்தையும், 30,000 காலியான மாத்திரைகளையும் (empty capsules) பிரேம்ஜி இணையத்தில் வாங்கியிருப்பது தெரிய வந்தது. மேலும், கடந்த 15 நாள்களாக காலி மாத்திரைகளில் ரசாயனத்தையும் அவர் நிரப்பியுள்ளார்.

ரசாயனம் நிரப்பப்பட்ட மாத்திரைகளை வலி நிவாரணிகள் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்றும்கூறி, அவற்றை பொதுமக்களுக்கு பிரேம்ஜி விநியோகித்துள்ளார். இந்த விஷ மாத்திரைகளை உட்கொண்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், ஆபத்தான நிலையில் யாரும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், பிரேம்ஜியிடம் இருந்த 14,900 மாத்திரைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என்றும், இந்தச் சம்பவத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பேதும் உள்ளதா என்றும், இதற்கான காரணம் குறித்தும் பிரேம்ஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பிரேம்ஜி மீது பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 123-ன் கீழ் (குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் முதலியவற்றின் மூலம் காயம் ஏற்படுத்துதல்), பைகுல்லா காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரேம்ஜியை இரண்டு நாள்களுக்கு போலீஸ் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.