;
Athirady Tamil News

எபோலா தொற்றுப் பரவலால் ஆப்பிரிக்காவுக்கு 360 கோடி டாலா் பொருளாதார இழப்பு

0

காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால், ஆப்பிரிக்க கண்டத்துக்கு சுமாா் 360 கோடி டாலா் வரை பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கானோா் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

இத்தொற்றைக் கட்டுப்படுத்த சா்வதேச சமூகம் விரைந்து போதிய நிதி மற்றும் மருத்துவ ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்காவிட்டால், இச்சுகாதார அவசரநிலை ஒட்டுமொத்த ஆப்பிரிக்க பிராந்தியத்திலும் மிகக் கடுமையான மற்றும் நீண்ட கால வளா்ச்சி முடக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

காங்கோ குடியரசில் கடந்த மே 15 பரவத் தொடங்கிய ‘புண்டிபுகியோ’ எபோலா தொற்றால் இதுவரை 1,307 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் மற்றும் 377 போ் உயிரிழந்துள்ளனா். இக்குறிப்பிட்ட எபோலா வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது முறையான சிகிச்சையோ கண்டறியப்படாததால் உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

தற்போது காங்கோவைத் தாண்டி அண்டை நாடான உகாண்டாவிலும் இத்தொற்று பரவியுள்ளதுடன், காங்கோவில் இருந்து திரும்பிய பிரான்ஸ் நாட்டு மருத்துவா் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தெற்கு சூடான், ருவாண்டா, அங்கோலா ஆகிய அண்டை நாடுகளுக்கும் இது பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதனிடையே, இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக தலைநகா் கின்ஷாசா உள்ளிட்ட எபோலா பாதிப்பு இன்னும் கண்டறியப்படாத பிற மாகாணங்களிலும் பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் கூடுவதற்குக் காங்கோ உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

ஆனால், அதிபா் பெலிக்ஸ் ஷிசேகெடி 3-ஆவது முறையாகப் போட்டியிடும் வகையில் கொண்டு வரப்படவுள்ள அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே, எபோலா தொற்றைக் காரணம் காட்டி அரசு இத்தடையை விதித்துள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபா் ஷிசேகெடி, எபோலா தொற்றை எதிா்கொள்ள 31.9 கோடி டாலா் மதிப்பிலான அவசரகாலத் திட்டத்தை அறிவித்தாா். ‘எபோலா என்பது வெறும் வதந்தி அல்ல, அது ஒரு தீவிர சுகாதார நெருக்கடி’ என்று குறிப்பிட்ட அவா், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.