;
Athirady Tamil News

வலி.வடக்கில் தனியார் காணியை அரச காணி என விடுக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

0
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை அரச காணி என அறிவித்து, குறித்த காணியில் இருந்து தனியாரை வெளியேறுமாறு , தெல்லிப்பழை பிரதேச செயலர் விடுத்த அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் காணியை அரச காணி என அறிவித்து , அந்த காணியில் இருந்து தனியாரை வெளியேறுமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலர் அறிவித்தல் வழங்கி இருந்தார்.
  அந்த அறிவித்தலைத் தொடர்ந்து, குறித்த காணி அரசுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்குமாறு காணி உரிமையாளர் கோரிய நிலையிலும் , அதற்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகளில் காணி அளவீட்டுத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், யாழ்ப்பாணம் காணிப் பதிவகம் மற்றும் விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களை காணி உரிமையாளர்  நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அவற்றில், குறித்த காணி அரசால் சுவீகரிக்கப்படவில்லை என்றும், அது தனியார் காணியாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 2025 செப்டம்பர் 15 ஆம் திகதியிட்ட வெளியேற்றல் அறிவித்தலை மேன் முறையீட்டு நீதிமன்று , ரத்து செய்யும் உறுதிகேள் எழுத்தாணையையும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில், மனுதாரர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தடையீட்டு எழுத்தாணையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.