இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுகளுக்குரிய இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம், நாட்டின் விவசாயம் சாரா பொருளாதார நடவடிக்கைகள் குறித்த அண்மைக்கால மற்றும் நம்பகமான புள்ளிவிபரத் தகவல்களைத் திரட்டுவதாகும்.
தரவுகளின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டமிடலுக்கு வலுவானதொரு அடித்தளத்தை வழங்கும் இத்தொகைமதிப்பு, நாட்டில் தற்போதுள்ள அனைத்து கைத்தொழில், நிர்மாணம், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தத் தொகைமதிப்பின் முதற்கட்டமாக, 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரிய அளவிலான நிறுவனங்களின் தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன டிஜிட்டல் முறையின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், எந்தவொரு இடத்திலிருந்தும் சுயாதீனமாக இணையம் ஊடாகப் பாதுகாப்பாகவும், எளிதாகவும், வினைத்திறனுடனும் தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.