அமைச்சரவை அனுமதி இருந்தும் நிரந்தர நியமனம் இல்லை: முல்லைத்தீவு உதவி ஆசிரியர்கள் யாழில் கண்ணீர் மல்கக் கோரிக்கை!
நாங்கள் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறோம்.
எங்கள் பகுதியில் உள்ள சிங்களப் பாடசாலைகளில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இவ்வாறான நிலையில் தான் எமது மாணவர்களுக்காக நாம் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். எமக்கான சம்பள பிரச்சனை முதல் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம்.
எங்கள் அனைவருக்கும் நியாயம் வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், நாங்கள் கல்வி கற்பிக்க தகுதியற்றவர்கள் அல்ல, நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் தகுதியின் காரணமாகவே அன்றைய அதிகாரிகள் எங்களைச் சேவையில் இணைத்துக்கொண்டனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, எங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் (Cabinet Approval) கிடைத்தது. மாகாண மட்டத்திலும் பரிந்துரை செய்யப்பட்டது.
நாங்கள் படும் இந்தத் துயரங்களையும், மாணவர் படும் கஷ்டங்களையும் கருத்தில்கொண்டு, எங்களது பிரச்சினைகளை ஆராய்ந்து, எங்கள் அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.