உடல் பருமனால் குழந்தை பிறக்கவில்லை எனக்கூறி மனைவியை கொன்ற மல்யுத்த வீரர் – கர்நாடகத்தில் பயங்கரம்
பெங்களூரு,
உடல் பருமனாக இருப்பதால், கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்ததாக கூறி மனைவியை மல்யுத்த வீரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்யுத்த வீரர்
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா ஹனாசி கிரா மத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 32). மல்யுத்த வீரர். இவருக்கும் கலபுர கியை சேர்ந்த பிரியங்கா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
பசவராஜ் தான் தொழில் செய்ய மனைவியின் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரக்கூறி தகராறு செய்துள்ளார். பசவராஜூடன் சேர்ந்து அவரது தாய் ரேனவ்வா, தந்தை சுரேஷ் மற்றும் தம்பி சித்தா ரமேஷ் ஆகியோரும் வரதட்சணை கேட்டு பிரியங்காவை துன்புறுத்தியுள்ளனர்.
கழுத்தை நெரித்து கொலை
இந்தநிலையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் பிரியங்காவுக்கு குழந்தை இல்லை. எனவே நீ உடல் பருமனாக இருப்பதே குழந்தை பிறக்காததற்கு காரணம் என்று கூறி பசவராஜ் அடிக்கடி பிரியங்காவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த 29-ந்தேதியும் குழந்தை பிறக்காதது குறித்து தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பிரியங்கா உடல் பருமனாக இருப்பதே, குழந்தை பிறக்காததற்கு காரணம் என்று கூறி பசவராஜ் சண்டையிட்டு உள்ளார். அப்போது அவர்களின் சண்டை தீவிரமடையவே ஆத்திரம் அடைந்த பசவராஜ், பிரியங்காவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதிலும் ஆத்திரம் அடங்காத அவர், தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.
4 பேர் கைது
பின்னர் பிரியங்காவின் பெற்றோரை தொடர்புகொண்ட பசவராஜ், உங்களது மகள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தார்வாருக்கு விரைந்து வந்த அவர்கள், இதுதொடர்பாக தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கேட்டும், உடல் பருமனாக இருப்பதாக கூறி கொடுமைப்படுத்தியதுடன், எங்கள் மகளை பசவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் என கூறி, போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பசவராஜ், ரேனவ்வா, சுரேஷ் மற்றும் சித்தாரமேசை கைது செய்து விசாரித்தனர். இதில் மனைவி உடல் பருமனாக இருப்பதால், அவர் கர்ப்பமாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்ததாகவும், எனவே அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பசவராஜ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.