;
Athirady Tamil News

இலங்கையின் பத்தாவது மருத்துவபீடம் திறந்துவைப்பு

0

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பெரும் நிதி பங்களிப்பில், அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் பங்கேற்பதற்காக, சவூதி அபிவிருத்தி நிதியத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஃபைசல் முகம்மது எச். அல்-கஹ்தானி தலைமையிலான உயர்மட்ட அரச குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இக்குழுவில் ஆசிய நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் டொக்டர் சவுத் அயித் ஆர். அல்-ஷம்மரி, நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ராபி ஹெசாப் டி, அல்-ஸஆதூன் மற்றும் சிரேஷ்ட நெறிமுறை நிபுணர் முகம்மது சுலைமான் எம். அல்-குவைஃப்லி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுடன் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்வித்துறையில் சவூதியின் பாரிய முதலீடு பற்றித் தெரிவித்த, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீட அபிவிருத்தித் திட்டத்துக்காகச் சவூதி அபிவிருத்தி நிதியம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 187.5 மில்லியன் சவூதி ரியால்கள்) சலுகை நிதியுதவியாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் சவூதியின் நிதியுதவியுடன் இலங்கையின் உயர்கல்வித் துறையில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட இரண்டாவது முக்கிய திட்டம் இதுவாகும். இதற்கு முன்னர், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதியன்று 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வயம்ப பல்கலைக் கழக நகர அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீட அபிவிருத்தித் திட்டம் என்பது வெறும் கட்டடங்களை அமைப்பதற்கான முதலீடு மட்டுமல்ல. அது மனித வளம், சுகாதாரம், கல்வி, பிராந்திய அபிவிருத்தி மற்றும் முழு சப்ரகமுவ மாகாணத்தினதும் ஒட்டுமொத்த இலங்கையினதும் எதிர்கால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட உன்னத முதலீடாகும்” என தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக்காட்டினார்.

இந்த அதிநவீன மருத்துவபீடத் திட்டம் இரண்டு முக்கிய இடங்களில் பரந்து விரிந்த உட்கட்டமைப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முதன்மைப் பகுதியில் கல்வி, நிர்வாகம் மற்றும் பிற வசதிகளுக்காக 13 பிரத்தியேக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 500 மாணவர்களுக்கான தங்குமிட விடுதிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகள், நவீன நூலகம், 1,000 இருக்கை வசதிகள் கொண்ட பிரமாண்ட மாநாட்டு மண்டபம் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் 8 மாடிகளைக் கொண்ட (G+8) அதிநவீன கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இது நவீன ஆய்வுகூடங்களுடன் மருத்துவக் கற்பித்தல், நேரடிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளை சர்வதேச தரத்தில் வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் பத்தாவது மருத்துவபீடமாக இது வரலாற்றில் இணைகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவக் கல்வியானது கிராமப்புற மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தகுதியுடைய எமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே மருத்துவக் கல்வியைப் பெறும் வாய்ப்பு உருவாகும்” என்று தூதுவர் அமீர் அஜ்வத் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சவூதி அபிவிருத்தி நிதியமானது இலங்கையில் 15 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்காகச் சுமார் 438 மில்லியன் அமெரிக்க டொலர் (1.5 பில்லியன் சவூதி ரியால்கள்) சலுகை நிதியுதவிகளை வழங்கியுள்ளது. அவற்றில் சில முக்கிய திட்டங்களாக கொழும்பு குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம், இலங்கையின் மிக நீளமான பாலமான கிண்ணியா பாலம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் Neuro-Trauma பிரிவு, களுகங்கை பிரமாண்ட அபிவிருத்தித் திட்டம், வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டம், பேராதனை– பதுளை– செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போதும் கூட, ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களுக்கான நிதியுதவிகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்கிய ஒரே இருதரப்பு அபிவிருத்தி நிதி நிறுவனம் சவூதி அபிவிருத்தி நிதியமே ஆகும் என தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக் காட்டினார்.

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் சவூதி அரேபியாவும் இலங்கையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையானது, இலங்கையின் பொருளாதார மீட்சிக்குச் சவூதி அரேபியா வழங்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு மிகச்சிறந்த சான்றாகும்.

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காகத் தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கிவரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவூதி மன்னருமான சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூதுக்கும், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூதுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.