உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போன்! அறிமுகம் செய்தது சீனா!
உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போனை சீனா அறிமுகம் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஸ்டெப்ஃபன், உலகின் முதல் வெகுஜனச் சந்தைக்கான ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. முற்றிலும் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு ஸ்டெப் எக்ஸ் நியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள ஓர் அமைப்பின் மீது செயற்கை நுண்ணறிவு சேர்க்கப்படுவதற்குப் பதிலாக, இது முற்றிலும் புதிதாக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் பெரிய மாடல் நேட்டிவ் ஏஜென்டிக் ஸ்மார்ட்போன் என்று குறிப்பிடப்படுகிறது.
சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டெப்எக்ஸ் நியோ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏஜென்டிக் ஏஐ ஸ்மார்ட்போன் என்றால் என்ன?
வழக்கமான ஸ்மார்ட்போனில் செயலிகள் இருக்கும். அந்த செயலியை பயனர்கள் இயக்கி தேவையானவற்றை செய்துகொள்ள வேண்டும். ஆனால், ஏஜென்டிக் செய்யறிவு ஸ்மார்ட்போன் முற்றிலும் மாறாக, ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகளை பயனர்களின் உள்ளீடு இல்லாமல் இயக்கும்.
அதாவது டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டளையை மட்டும் கொடுத்தால் போதுமானது. ஸ்மார்ட்போனில் உள்ள ஏஐ அசிஸ்டென்ட் டிக்கெட் முன்பதிவுக்கான ஒவ்வொரு படிநிலைகளையும் பூர்த்தி செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்து முடித்துவிடும்.
ஆன்டிராய்டு பயன்பாடு போல அல்லாமல், முழுக்க முழுக்க செய்யறிவு பயன்பாட்டிற்கு ஏற்ப இயங்குதளம் (OS) வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப்ஃபன் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான அமோ ஏஐ (Amoo AI) என்ற இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது. இது நினைவகத்தையும் கட்டளை நிறைவேற்றும் படிகளையும் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளும்.
இந்த ஸ்மார்ட்போனின் பெருமளவு உற்பத்தி 2028 ஆம் ஆண்டு தொடங்கும் என ஸ்டெப்ஃபன் நிறுவனம் தெரிவித்துள்ளது.