;
Athirady Tamil News

அரியானா: பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ தூரம் இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – எதற்காக தெரியுமா?

0

சண்டிகர்,

ஹரியானாவில் கார் ஓட்டுநர் ஒருவர் டீசலை நிரப்பிவிட்டு, பெட்ரோல் பங்க் ஊழியரை சுமார் 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பணம் தராமல் எஸ்கேப்
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டம் ஷாபாத் பகுதியில் உள்ள அரசு பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வெள்ளை நிற ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று வந்தது. அந்த காரில் வந்த நபர் ரூ.3,500 மதிப்பிலான டீசலை கட கடவென நிரப்பியுள்ளார்.

ஓட்டுநரின் கையில் பணம் இருந்ததால், அங்கு பணியில் இருந்த லப் சிங் மற்றும் பப்பு சிங் என்ற ஊழியருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால், டீசல் நிரப்பி முடித்தவுடன் அந்த நபர் பணத்தைக் கொடுக்காமல் காரை வேகமாக எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார்.

காரோடு இழுத்து செல்லப்பட்ட ஊழியர்
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர், காரின் கதவைத் திறந்து ஓட்டுநரைப் பிடிக்க முயன்றார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஊழியருடன் போராடியவாறே காரை அதிவேகமாக ஓட்டினார். இதனால் ஊழியர் காரின் கதவைப் பிடித்துக்கொண்டே தொங்கியபடி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்
ஒரு கட்டத்தில் கார் கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில், ஓட்டுநர் அந்த ஊழியரை ஓடும் காரில் இருந்து பலவந்தமாக வெளியே தள்ளிவிட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார். காரில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பலத்த காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார்.

சிசிடிவி காட்சிகள் வைரல்
இந்த ஒட்டுமொத்த கொடூர சம்பவமும் பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கார் ஓட்டுநர் வேண்டுமென்றே வண்டியின் முன் மற்றும் பின் பக்க எண்களை மறைத்துவிட்டு நம்பர் பிளேட் இல்லாமல் வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.