அருச்சுனா எம்.பி க்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள கடற்தொழில் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று (16) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர், மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
கூட்டம் ஆரம்பத்தில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், பின்னர் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக பல கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைப் பயன்படுத்தி அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறான நடைமுறை என தெரிவித்த அவர், இதனால் அதிகாரிகளின் சமூக மதிப்பு பாதிக்கப்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இன்றைய சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
“கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். அடுத்த நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். அப்போது உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.