;
Athirady Tamil News

இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்!

0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்

இராமநாதபுரம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.