;
Athirady Tamil News

கோடரியால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையிலும் கப்டனின் தவறாத கடமை உணர்வு!

0

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட பிளைதுபாய் விமானத்தில், நடுவானில் அரங்கேறிய ஒரு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. வழமையான விமானப் பயணம் போன்றே ஆரம்பமான அந்த 3.5 மணி நேரப் பயணம், நூற்றுக்கணக்கான மனிதர்களின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்

அதிகாரபூர்வ அறிக்கையின் அடிப்படையில், அந்த 17,000 அடி உயரத்தில் விமானியின் அறைக்குள் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதுதான் உலகையே ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது. இந்திய விமானியான கப்டன் சுமித் மச்சார் எவ்வாறு அந்த விமானத்தையும் 170 க்கும் மேற்பட்ட பயணிகளையும் காப்பாற்றினார்? விமானமோட்டுதலென்பது எத்தகைய சவாலான பணி என்பதையும் உலகுக்கு உணர்த்தியுள்ளது

அன்றைய தினம் விமானம் புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் எந்தப் பிரச்சினையுமின்றிச் சென்றுகொண்டிருந்தது. விமானியின் அறைக்குள் முதன்மை விமானியான இந்தியாவைச் சேர்ந்த கப்டன் சுமித் மச்சாரும், துணை விமானியான ஓமான் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமியும் இருந்தனர்.

பயணத்தின் நடுவே, துணை விமானி தொழுகை செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கு மரியாதையளிக்கும் வகையில் கப்டன் சுமித் முன்னே பார்த்து அமர்ந்திருந்தார். ஆனால், அடுத்த 4-5 நிமிடங்களில் சுமித்தின் தலையின் பின்புறத்தில் பலமான ஒரு தாக்குதல் விழுந்தது. அவசரகாலத்தில் விமானியின் அறைக்குள் பயன்படுத்தப்படும் அவசரகாலக் கோடாரியால் துணை விமானி, கேப்டன் சுமித்தை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

கடுமையான தாக்குதலால் சுமித்தின் பார்வை மங்கலானது. இரத்தம் சொட்டச் சொட்ட அவர் விமானியின் அறைத் தரையில் சரிந்து விழுந்தார். அதே நேரத்தில், தாக்குதல் நடத்திய துணை விமானி விமானத்தை செங்குத்தாகக் கீழே செலுத்தத் தொடங்கினார். 17,000 அடியில் இருந்த விமானம் அதிவேகமாகத் தரையை நோக்கிப் பாய்ந்தது.

விமானம் நிலைகுலைந்து கீழே சென்றதால், கேபினுக்குள் இருந்த பயணிகள், உணவுப் பொருட்கள் எல்லாம் காற்றில் பறக்கத் தொடங்கின. பயணிகள் அலறும் சத்தமும், காற்றின் இரைச்சலும் விமானியின் அறைக்குள் கேட்டது.

மயக்க நிலைக்குச் சென்ற கப்டன் சுமித் மச்சார், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார். “நான் இப்போது செயல்படவில்லை என்றால், நாமும் இறந்துவிடுவோம்; உள்ளே இருக்கும் நூற்றுக்கணக்கான மக்களும் இறந்துவிடுவார்கள்” என்பதைத் தனது ஆழ்மனதில் உணர்ந்தார்.

விமானியின் அறைக் கதவை வெளியிலிருந்து திறக்க பயணிகள் மற்றும் பிற ஊழியர்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்த முயன்றனர். ஆனால், உள்ளிருந்த துணை விமானி கதவு திறக்காதவாறு பூட்டி வைத்திருந்தார். உள்ளிருந்து கதவைத் திறக்க கைப்பிடியை வேகமாத் திருப்ப வேண்டியது அவசியமாக இருந்தது.

கடுமையான காயங்களுடன் தரையில் வீழ்ந்திருந்த கப்டன் சுமித், தனது உடலில் எஞ்சியிருந்த கடைசி சொட்டுச் சக்தியையும் ஒன்று திரட்டினார். தரையில் ஊர்ந்து சென்று, அறைக் கதவின் கைப்பிடியைப் பிடித்து பலமாகத் திருப்பினார். கதவு திறந்தது

கதவு திறக்கப்பட்டதும், வெளியில காத்திருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக விமானியின் அறைக்குள் பாய்ந்தனர்.

உள்ளே நுழைந்த பயணிகள், தாக்குதல் நடத்திய ஓமான் நாட்டுத் துணை விமானியைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்கிருந்த தொலைபேசி வயர்களைக் கொண்டு துணை விமானியைப் பலமாகப் பிணைத்துக் கட்டினர். நீர்க்குழுாய் பழுது பார்க்கும் ஒருவர் உடனடியாக முன்னோக்கி வந்து, நிலைமையைச் சமாளிக்க விமானத்தை தற்காலிகமாகச் சீரமைத்தார்.

இரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கப்டன் சுமித்திற்கு, விமானத்தில் பயணித்த ஒரு பல் மருத்துவர் முதலுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.அதிர்ஷ்டவசமாக, அதே ஃப்ளைதுபை நிறுவனத்தைச் சேர்ந்த வேறு இரண்டு விமானிகள் பயணிகளாக அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் உடனடியாகக் விமானியின் அறைக்குள் நுழைந்து விமானத்தின் முழுத் கட்டுப்பாட்டையும் கையில் எடுத்தனர்.

விமானத்தில் இஸ்ரேலிய பயணிகள் அதிகம் இருந்தபோதிலும், இராஜதந்திர உறவுகள் இல்லாத சவுதி அரேபியா, மனிதநேய அடிப்படையில் அவசர தரையிறக்கத்துக்கு அனுமதியளித்தது. விமானம் சவுதியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

விசாரணையில், தாக்குதல் நடத்திய ஓமான் துணை விமானியின் பெயர் ஹமாம் அல்-ஹம்மாமி என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே ஓமன் ஏர் (Oman Air) நிறுவனத்தில் பணியாற்றியபோது, இவரது தீவிரவாதச் சிந்தனைகள் காரணமாக விமானி பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டவர்.

பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் விமானப் போக்குவரத்து முகாமைத்துவப் பட்டம் பெற்றவர்.

தாக்குதலுக்குப் பிறகு பயணிகளால் பிடிக்கப்பட்டு கட்டப்பட்ட துணை விமானி “என்னைக் கொல்லுங்கள்!” என்று கத்தியுள்ளார். அவன் தற்கொலை தாக்குதலாளியாக விமானத்தைத் தரையில் மோதி அழிக்க முயன்றதும், தீவிரவாத சித்தாந்தத்தால் தூண்டப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி, மருத்துவமனையில் இருக்கும் கப்டன் சுமித் மச்சாருடனும் அவரது குடும்பத்தினருடனும் காணொளி வழியே உரையாடினார். “140 கோடி இந்தியர்களும் உங்களைக் கண்டு பெருமைப்படுகிறார்கள். இந்தியர்கள் மற்றவர்களின் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, தங்கள் உயிரைக் கொடுத்தாவது பிறரைக் காப்பவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டீர்கள்” என்று பாராட்டிய பிரதமர், வடஇந்தியக் கோயில்களில் அவருக்காக ‘மகாமிருத்யுஞ்சய மந்திரம்’ ஜெபிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கப்டன் சுமித்திடம் தொலைபேசியில் உரையாடி பாராட்டு தெரிவித்தார். “நீங்கள் இந்தியாவுக்கு மட்டும் கதாநாயகன் அல்ல, இஸ்ரேலுக்கும், ஒட்டுமொத்த உலகுக்குமே கதாநாயகன்! துணிச்சலான மனிதர்களால் எந்தத் தீமையையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளீர்கள்” எனக் கூறிய நெதன்யாகு, சுமித் மச்சாரையும் பிரதமர் மோடியையும் இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் சிறப்புத் தீபம் ஏற்ற அழைத்துள்ளார்.பிளைதுபாய் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தது என்பதால், UAE அரசு இந்தச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்றுள்ளது. அபுதாபியிலுள்ள உயர்தர மருத்துவமனையில், ஒரு நாட்டின் பிரதமருக்கு அளிக்கப்படும் மருத்துவக் கவனத்திற்கு இணையான சிகிச்சையை கப்டன் சுமித்திற்கு அளித்து வருகிறது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நேரில் சென்று சுமித்தைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தற்போது இந்தச் சம்பவம் குறித்து சவுதி அரேபியா, UAE, இந்தியா, ஓமான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நோக்கி 10,000 அமெரிக்கப் படைகள் நகரத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அதிகாரபூர்வ விசாரணை முடிவுகள் வரும் வரை எந்தவொரு முடிவிற்கும் வர முடியாது எனச் சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான காயங்கள், செங்குத்தாகக் கீழ் நோக்கிச் செல்லும் விமானம் என இவை அனைத்துக்கும் நடுவே கப்டன் சுமித் மச்சார் காட்டிய மனவுறுதியும், நொடிப் பொழுது முடிவும் 170க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் காப்பாற்றியுள்ளது. மருத்துவப் படுக்கையிலிருந்து பேசிய கேப்டன் சுமித், “நான் எப்படி மீண்டும் விமானத்தை இயக்கப் போகிறேன் என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது”என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.