;
Athirady Tamil News

82 மாணவர்களுக்குப் பாதி மொட்டை அடித்த விடுதி கண்காணிப்பாளர்; பெற்றோர் அதிர்ச்சி!

0

இந்தியா மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் (ஆசிரமப் பள்ளி) 82 மாணவர்களுக்குப் பாதி மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திராபூர் மாவட்டம் சிமூர் தாலுகாவில் உள்ள ஜம்புல்காட் அரசுப் பள்ளியில் சனிக்கிழமை அன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது .இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.

விளையாடிய மாணவர்களுக்கு தண்டனை
பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யும் பணியின் போது, சில மாணவர்கள் வரிசையில் நிற்காமல் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விடுதி கண்காணிப்பாளர், விளையாடிய மாணவர்களின் தலைமுடியில் பாதியை மட்டும் வெட்டுமாறு முடிதிருத்துபவருக்கு உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாகப் பாதி மொட்டையடிக்கப்பட்ட தோற்றத்துடன் மாணவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தின.

இச்சம்பவம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு மாணவர்களின் தலைமுடியைச் சீராக வெட்டுமாறு உத்தரவிட்டனர். அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை மீண்டும் முடிதிருத்தம் செய்யப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டது.

இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கண்காணிப்பாளர் பிரசாந்த் மேஷ்ராம், இந்த நடவடிக்கை மாணவர்களின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என்றும் இதன் பின்னணியில் தவறான நோக்கம் எதுவுமில்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு பள்ளி முதல்வர் பிரசாந்த்கிரி விடுதி கண்காணிப்பாளருக்குக் காரணங்கேள்வி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.