மல்ஹருஸ் சம்ஸ் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்றா நோய் மற்றும் தலசீமியா பரிசோதனை முகாம்
மாணவர்களுக்கான தலசீமியா மற்றும் சுகாதாரப் பரிசோதனை.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இப்பரிசோதனை முகாமினூடாக, பிராந்தியத்தில் முதன்முறையாக இத்தகைய விரிவான மருத்துவப் பரிசோதனை திட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பரிசோதனைத் திட்டமானது Caritas EHED நிறுவனத்தின் ‘Mitigation of Thalassemia Project’ என்ற தலசீமியா தடுப்புத் திட்டத்துடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்பட்டது.
அடிப்படை உடற்பரிசோதனை: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயரம், நிறை, உடல் நிறைச் சுட்டி (BMI) மற்றும் உயர் குருதி அமுக்கம் (Blood Pressure) என்பன இதன்போது பரிசோதிக்கப்பட்டன.இரத்த மாதிரிச் சேகரிப்பு: குருதியில் சீனியின் அளவு (Blood Glucose), கொலஸ்ட்ரால் அளவு (Lipid Profile), சிறுநீரகச் செயற்பாடு தொடர்பான சீரம் கிரியேட்டினின் (Serum Creatinine) மற்றும் தலசீமியா நோயறிதல் (Thalassemia Screening) ஆகிய பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகள் பெறப்பட்டன.
சுகநலக் கல்வி வழிகாட்டல்: சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் J. மதன் அவர்களினால் தலசீமியா நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் வீரியம், பரம்பரை ரீதியான தாக்கம் மற்றும் முன்ஆயத்த தடுப்பு முறைகள் தொடர்பில் மாணவர்களுக்குத் தெளிவான சுகநலக் கல்வி வழிகாட்டப்பட்டது.
“பாடசாலைப் பருவத்திலேயே இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றா நோய்கள் மற்றும் தலசீமியா போன்ற பரம்பரை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்த முடியும்.என சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இப் பரிசோதனை முகாமில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச்சுகாதார செவிலிய சகோதரி , சிரேஷ்ட பொதுச்சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர் , பொதுச்சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள் , பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கள மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றிப் பரிசோதனைகளைச் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர்.
