;
Athirady Tamil News

யாழ்ப்பாணம்–பேருவளை கடற்பகுதிக்கு எச்சரிக்கை ; மீனவர்களே அவதானம்

0

யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கே இன்று (31) இரவு முதல் நிலவும் மழைக்கால நிலைமை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

இந்த அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவால் அனைத்து மீனவர் சமூகத்திற்கும் அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை மிக உயர்வாக அதிகரிக்கக்கூடும் என்றும், அத்துடன் கடல் அலைகள் கொந்தளிப்பாக மாறுவது சிறிய படகுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் எனத் தாம் மீனவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலவும் வானிலை தொடர்பில் மீன்பிடி மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தமது உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.