எபோலா அச்சம்: மருத்துவமனையைத் தவிர்க்கும் கர்ப்பிணிகள்… காங்கோவில் இரட்டிப்பான உயிரிழப்பு!
எபோலா அச்சம் காரணமாக கிழக்கு காங்கோவில் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளைத் தவிர்த்து வருவதால் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட புண்டிபுகியோ வைரஸ் தொடர்புடைய எபோலா பாதிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
நோய் பரவல் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து இட்டுரி பகுதியில் தாய்மார்களின் இறப்பு விகிதம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. பிரசவ காலச் சிக்கல்களால் வாரத்திற்குச் சராசரியாக ஆறு பெண்கள் உயிரிழந்ததாக காங்கோவிற்கான ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்துக்கான (UNFPA) துணைப் பிரதிநிதி நோயெமி டால்மோன்ட் தெரிவித்தார்.
நோய் பரவலுக்கு முன்பு இந்தாண்டில் வாரத்திற்குச் சராசரியாக 3.1 கர்ப்பிணிகள் உயிரிழந்த நிலையில், மே 25 முதல் ஜூலை 19 வரையிலான காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 5.8 ஆக உயர்ந்தது.
அதே காலகட்டத்தில் மருத்துவ மையங்களுக்கு வெளியே நிகழ்ந்த இறப்புகளின் விகிதம் 9.1 சதவீதத்திலிருந்து 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. எபோலா தொற்று பரவலுக்கு இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா பாதிப்பைக் காங்கோ எதிர்கொண்டு வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளைத் தவிர்ப்பதாலும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதாக மறைமுக நெருக்கடி உருவாகி வருவதாகச் சுகாதார மற்றும் உதவிப் பணியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைப் பிறப்புக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக காங்கோ விளங்குகிறது. ஒரு பெண்ணுக்கு நிகழும் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் பிரசவ கால இறப்பு விகிதம் ஆகிய இரண்டிலும் காங்கோ உலகின் மிக உயர்ந்த விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.