;
Athirady Tamil News

இந்தியாவின் இதயத் துடிப்பான விவசாயத்துறை! 

0

இன்றைய உலகப் பொருளாதார அமைப்பில் விவசாயம் என்பது வெறும் உணவுப் உற்பத்தியோடு நின்றுவிடாமல், நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் புவிசார் அரசியலிலும் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது.

அந்த வகையில், ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி உலக அளவிலும் விவசாயத் துறையில் இந்தியா அடைந்து வரும் பிரம்மாண்ட வளர்ச்சி வியப்பளிக்கத்தக்கதாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பின் மிக முக்கியமான அடிப்படைகளில் ஒன்றாகத் திகழும் விவசாயத் துறை, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 55 சதவீதமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.

இலங்கை தனது நாட்டின் உணவுத் தேவையின் கணிசமான பகுதியை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்கிறது. புவியியல் ரீதியான நெருக்கம், மிகக் குறைந்த கப்பல் போக்குவரத்து நேரம், அதாவது, தூத்துக்குடி மற்றும் சென்னையிலிருந்து கொழும்புக்கு குறுகிய நாட்களில் அடைய முடியுமான நிலை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (ISFTA) ஆகியவை இந்த வணிகத்தை எளிதாக்குகின்றன.

உலக உற்பத்தியில் முன்னணி நிலை

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்தியா, உலகளாவிய விவசாய உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய எருமை மாடு உள்ளிட்ட கால்நடைச் செல்வத்தைக் கொண்டுள்ள அந்நாடு, கோதுமை, நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பிலும் முதலிடத்தைப் வகிக்கின்றது. அத்துடன், பயறு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உற்பத்தியில் உலகின் முதன்மை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது.

குறிப்பாக, பால் உற்பத்தியைப் பொறுத்தவரை 1998 ஆம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை வகித்து வருகின்றது. தற்போதைய தரவுகளின்படி, உலகளாவிய பால் உற்பத்தியில் 25 சதவீத பங்களிப்பை இந்தியா வழங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில், பால் உற்பத்தியானது 14.63 கோடி டன்களிலிருந்து 23.92 கோடி டன்களாக 63.56 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

மேலும், பழங்கள், காய்கறிகள், தேயிலை, மீன்வளர்ப்பு, பருத்தி, கரும்பு, கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியில் அதன் பிரிக்க முடியாத பங்கையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஏற்றுமதிப் பெருக்கம் மற்றும் பொருளாதார பங்களிப்பு

இந்தியாவின் விவசாய உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் 40 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், நாட்டின் தேவைக்குப் போக எஞ்சியவற்றை ஏற்றுமதி செய்யும் உபரித் திறனையும் எட்டியுள்ளது.

2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி சுமார் 51.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போதைய கணக்கீடுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் 17.3 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

விவசாய ரசாயன ஏற்றுமதியிலும் (Agrochemical Exports) இந்தியா அபார வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்து, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடல் உணவு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டில் இந்தியா 7.45 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 16.98 லட்சம் மெட்ரிக் டன் கடல் உணவை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் உறைவிக்கப்பட்ட இறால்கள் (Frozen Shrimp) மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டும் உறைவிக்கப்பட்ட கணவாய் மீன் மற்றும் இறால் உட்பட 5.17 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கடல் உணவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

உணவுப் பதப்படுத்தல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி

இந்தியாவின் உணவுச் சந்தையில் 32 சதவீத பங்கைக் கொண்டுள்ள உணவுப் பதப்படுத்தும் துறை, உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி மற்றும் வளர்ச்சித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்துறை மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், கிராமப்புறத் தொழில்மயமாக்கலிலும், விநியோகச் சங்கிலி மேம்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்துடன், பாரம்பரிய விவசாய முறைகளிலிருந்து விலகி, நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்குவதிலும் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), புளொக்செயின் (Blockchain), ட்ரோன்கள் (Drones), தொலை உணர்வு நுட்பம் (Remote Sensing) மற்றும் புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு மின்னணு விவசாயச் செயலிகள் (e-farming apps) விவசாயிகளுக்குப் பெரிதும் உதவி வருகின்றன.

இத்தகைய தொழில்நுட்பப் பயன்பாடுகள், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நேரடிச் சந்தை அணுகலையும் வணிகத்தில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்கின்றன.

சர்வதேச முதலீடுகளும் எதிர்கால இலக்குகளும்

இந்திய அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களும், வெளிப்படையான பொருளாதாரச் சூழலும் இத்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) பெருமளவில் ஈர்த்துள்ளன.

ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2025 வரையிலான காலப்பகுதியில், விவசாய சேவைகள், விவசாய இயந்திரங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறைகளில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் முதலீடுகளாக ஈர்க்கப்பட்டுள்ளன. உணவுப் பதப்படுத்தும் துறை மட்டுமே இக்காலகட்டத்தில் சுமார் 13.49 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டாகப் பெற்றுள்ளது.

தானியப் பயிர் உற்பத்தியிலும் இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு வருகின்றது. 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி சாதனை அளவாக 3,765.63 லட்சம் மெட்ரிக் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தி மட்டும் 1,540.24 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசிய நாடுகளுக்கான அரிசி ஏற்றுமதித் தேவை, உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கான பங்களிப்பு, நவீன தொழில்நுட்ப இணைப்பு மற்றும் கிராமப்புறப் பொருளாதார எழுச்சி எனப் பல தளங்களிலும் இந்தியாவின் விவசாயத் துறை அடைந்து வரும் இந்த பிரம்மாண்ட வளர்ச்சி, ஏனைய வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக அமைகிறது என்பதில் ஐயமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.