;
Athirady Tamil News

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது

0

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக  களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த களுவாஞ்சிகுடி பொலிஸார், திங்கட்கிழமை (03) திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் அனைத்தையும் மீட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியையும் கைது செய்துள்ளனர்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குறித்த யுவதி, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த நிலையில் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதீப் களுபாலவின் வழிகாட்டுதலில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் லீலாரெத்னவின் பணிப்புரைக்கமைய, களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பத்திகாரி ஆர்.யூட் றொமேஸின் நேரடிக் கண்காணிப்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி. ஜோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையையும் நகைகள் மீட்பையும்   மேற்கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.