;
Athirady Tamil News

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி இயக்கினால் அபராதம் – நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

0

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி இயக்கினால் அபராதம் விதிக்கப்படுவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை
தமிழ்நாட்டில் Rapido போன்ற நிறுவனங்கள், பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன்குமார், பைக் டாக்ஸி குறித்த பொதுநல மனு ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், தமிழகத்தில் இந்த சேவையை முறைப்படுத்தத் தனியாக எவ்வித விதிகளும் உருவாக்கப்படாததால், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அபராதம் விதித்தல் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எளிய ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, பைக் டாக்ஸிகளை முறைப்படுத்தத் தனி அமைப்பை உருவாக்கவும், உரிய உரிமம் வழங்க விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி இயக்குவதற்கு அனுமதி கிடையாது, விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு, பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை கேட்ட நீதிபதிகள், பைக் டாக்சிக்கு தற்போது அனுமதி இல்லை என்றால் அதை ஏன் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்தக்கூடாது. விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பாளர்கள் ஆவர்? என்று கேள்வி எழுப்பினர்.

பைக் டாக்ஸி இயக்குவது குறித்து ஒரு குழு அமைத்து அது கொடுக்கும் பரிந்துரைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், பைக் டாக்ஸிக்கு அனுமதி கொடுப்பதா? வேண்டாமா? என விரைவாக கொள்கை முடிவு எடுத்து, இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்துத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.