;
Athirady Tamil News

வட கொரியா பற்றிய அவதூறு: அமெரிக்காவுக்கு கண்டனம்!

0

வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி திரட்ட, அவர்களின் திறமையான ஐடி ஊழியர்களை போலி அடையாளங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற பயன்படுத்துவதாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 10 நட்பு நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.

அதில், வட கொரிய ஐடி ஊழியர்கள் வருமானத்தைப் பெற இணையதளங்களில் பிற நாட்டுக் குடிமக்களைப் போன்று அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த வருமானத்தை தங்களது நாட்டு அரசுக்கு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், வட கொரிய ஊழியர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டது.

வடகொரியா மீது சர்வதேச அளவில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் திட்டங்களுக்கு நிதி திரட்ட சைபர் குற்றங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் அந்நாடு பரவலாக ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு வடகொரியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்ட மறுப்புச் செய்தியில், “எங்கள் நாட்டின் மீதான பிம்பத்தைக் கெடுக்கும் தீய நோக்கத்துடன் வைக்கப்பட்ட வழக்கமான அரசியல் குற்றச்சாட்டு இது. இணைய வெளி தொடர்பான முக்கிய வளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, பிற நாடுகளிடம் இருந்து சைபர் அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறுவது மிகவும் முரணானது.

இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது சட்டவிரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் சாக்குபோக்கு மட்டுமே இது” எனத் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.