;
Athirady Tamil News

நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கப்பட்ட இந்திய சகோதரிகள்: 40 ஆண்டுகளுக்கு பின் இணைந்தது எப்படி?

0

ஆம்ஸ்டர்டாம்,

இந்தியாவில் பிறந்த சகோதரிகள் நெதர்லாந்திற்கு தத்துகொடுக்கபட்டனர். பின்பு சகோதரிகள் என தெரியாமலேயே தோழியாக பழகி வந்தனர். 40 ஆண்டுகளுக்கு பின் டி.என்.ஏ பரிசோதனை மூலம் சகோதரிகளாக ஒன்றிணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தோழியாக பழகினர்

இந்தியாவில் உள்ள அனாதை ஆசிரமத்தில் கைவிடபட்ட குழந்தைகளாக மீனா கெல்டிங்க் மற்றும் மினல் டிஜ்சென் வளர்ந்து வந்தனர். இவர்களை நெதர்லாந்தில் உள்ள வெவ்வேறு குடும்பங்கள் தத்தெடுத்துள்ளன.

நெதர்லாந்தில் மீனா கெல்ரிங்க் ‘வில்ப்’ என்ற பகுதியிலும், மினல் டிஜ்சென் ‘மேட்’ என்ற பகுதியில் வளர்ந்து வந்தனர். ‘வில்ப் – மேட்’பகுதிக்கு இடையே சுமார் 130 கி.மீ. தூரம் உள்ளது. 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் நெருக்கமாக நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரைபோல் மற்றொறுவர் இருப்பதை அவர்களது நண்பர்களும் கவனித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரையும் ‘சகோதரிகள்’ என்று கிண்டல் செய்துள்ளனர். அடுத்த 15 ஆண்டுகள் இருவரும் தொடர்பில் இல்லை.

டி.என்.ஏ பரிசோதனை

நெதர்லாந்தில் வளர்ந்த மினல், தற்போது பிரான்சில் வசித்து வருகிறார். மினலை தத்தெடுத்த குடும்பத்தால் அன்பாக வளர்க்கப்பட்டிருந்தாலும், தனது பிறப்பு அடையாளம் குறித்து ஒரு வெற்றிடம் இருந்துள்ளது. இந்த ஏப்ரல் மாதம் மைஹெரிடேஜ் என்ற டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தனது டி.என்.ஏ-வை வைத்து தரவுத்தளத்தில் (Data Base) பரிசோதனை செய்துள்ளார். இந்த பரிசோதனை முடிவில் மீனாவுடன் 100 சதவீதம் சகோதரி உறவு இருப்பதாக தெரியவந்தது. முதலில் அந்த பெண், தான் இளம் வயதில் சந்தித்த தோழி என்பதை மினல் உணரவில்லை. பின்பு சமூக வலைதளங்களில் மீனாவை தேடும்போது, பழைய புகைப்படங்கள் மூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார்.

மீண்டும் சந்தித்தனர்

இது குறித்து மீனா கூறுகையில் “உன்னை பார்க்கும்போது, நான் நம் வீட்டிற்கு வந்த உணர்வு தெரிகிறது. பல ஆண்டுகளாக என் இதயத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது. தற்போது அந்த விடுபட்ட கேள்வியின் பதில் கிடைத்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மினல் கூறுகையில், “நாங்கள் சகோதரிகளாக மாறுவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தோம். உண்மையில், நாங்கள் ஆரம்பம் முதலே சகோதரிகள்தான். ஆனால் அது எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

நெதர்லாந்தில் இருவரும் மீண்டும் சந்தித்தபோது, மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து சிரித்தும், அழுதும், உணர்ச்சிவசப்பட்டனர். மேலும், சகோதரிகளாக இணைந்ததை நினைவுக்கூறும் வகையில் முதல் செல்பியையும் எடுத்துக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.