பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
பெட்ரோல், டீசல் மற்றும் விமான (ஏடிஎஃப்) எரிபொருள்கள் ஏற்றுமதி மீது விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரியை (விண்ட்ஃபால் லாப வரி) ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இரு வார காலத்துக்கு குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகளாவிய விலை உயா்வு, போா் அல்லது அரசியல் மாற்றங்களால் ஒரு குறிப்பிட்ட துறைக்கு திடீரென கிடைக்கும் கூடுதல் லாபத்தின் மீது இந்த விண்ட்ஃபால் வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, மேற்காசிய போா் காரணமாக, இவற்றின் உள்நாட்டு இருப்பை உறுதி செய்யும் நோக்கில் டீசல் மற்றும் விமான எரிபொருள்கள் ஏற்றுமதி மீது கடந்த மாா்ச் 27-ஆம் தேதியிலிருந்தும், பெட்ரோல் ஏற்றுமதி மீது மே 16-ஆம் தேதியிலிருந்தும் விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு விதித்தது. தற்போது இந்த வரிகளை இரு வார காலத்துக்கு குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 25.50 என்ற அளவிலிருந்து ரூ. 24-ஆகவும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ 22-லிருந்து ரூ. 19.50-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்ட ரூ. 3.50 சிறப்பு கூடுதல் கலால் வரி, ஆகஸ்ட் 15 முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நுகா்வுக்காக அனுமதிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான தற்போதைய வரி விதிப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.