;
Athirady Tamil News

“தூய்மையான தீவுகள்” திட்டம்: நிலையான வளர்ச்சியை நோக்கி நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு – அரசாங்க அதிபர்

0
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்   (14.08.2026)  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வலுசக்தி அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்)  ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பொறியாளர் எஸ்.பி.சி. சுகேஸ்வர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் , இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்றதுடன், ஜனாதிபதி அவர்களின் கீழ் செயற்படும் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக –
க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இத் திட்டத்தின் ஊடாக இத்தீவுகளை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இயற்கையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி இத் தீவுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதன் மூலம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க முடியும். இதன் மூலம் தூய்மையானதும் நிலையானதுமான சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன், இத்தகைய இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சிறுதொழில்கள், உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். இதன் மூலம் தீவுப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்த முடியும்.

எனவே, க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் மூலம் இத் தீவுப் பிரதேசங்களை பசுமையான, சூழல் நேயமிக்க மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான பிரதேசங்களாக மாற்றுவதற்கான செயற்பாடுகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
இதற்காகவே இப்பகுதியின் சமூக அபிவிருத்தி தலைவர்கள், மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

குறிப்பாக, குறைந்தளவிலான மக்கள் தொகையைக் கொண்ட தீவுப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் கூடுதல் அக்கறை செலுத்தி, அவற்றில் காணப்படும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம், இப்பிரதேசங்களை வளமிக்கதும் பொருளாதார வலிமை கொண்டதுமான பகுதிகளாக மாற்றியமைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

எனவே, இத் திட்டத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பான பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு நோக்கங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு  விரிவான விளக்கங்களை வழங்கினார்.
யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  இ. சுரேந்திரநாதன் அவர்கள் தூய்மையான தீவுகள் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்வைப்புக்களை முன்வைத்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், கிளீன் ஸ்ரீலங்கா வடமாகாண இணைப்பாளருமான  எஸ். கபிலன்  கலந்து கொண்டு, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவான கருத்தாடல்கள் இடம்பெற்றன. தீவுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைமயமாக்கல் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின்   தவிசாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், சமூக அபிவிருத்தி சபைத் தலைவர்கள், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய மற்றும் மாகாண மட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.