பட்டம் விடுவதால் அதிகரிக்கும் விபத்துகள்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை
நாட்டில் விடுமுறை காலத்தில் பட்டம் விடுவது தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் பொதுமக்களும் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பட்டம் விடும் நடவடிக்கை அதிகரித்துள்ள போதிலும், கவனக்குறைவான முறையில் பட்டம் விடுவதால் கடுமையான காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்படக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும் சிறப்பு வைத்தியருமான பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான விபத்துகள்
பட்டம் விடும்போது ஒருவருடன் ஒருவர் மோதுதல், கீழே விழுதல் மற்றும் கூரைகள் உள்ளிட்ட உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிப்பதால் கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பட்டத்தின் நூல் உயர் மின்னழுத்த மின் கம்பிகளுடன் தொடர்பு கொள்ளும்போது மின்சாரம் பாய்ந்து கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கைகள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
எனவே, குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இணையாக அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் குழந்தைகள் பட்டம் விடும்போது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.