;
Athirady Tamil News

பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் தமிழ் இளைஞர் சேனை துண்டுப்பிரசுரம்

0

கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு விசேட தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.

குறித்த அமைப்பின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்தத் துண்டுப்பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

“கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட 9 இஸ்லாமிய பெண் சுகாதாரப் பணி உதவியாளர்கள் தமது கலாச்சார ஆடையுடன் கடமையேற்க வந்திருந்தனர். இதன்போது, அரச நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவான சீருடையையே அணிய வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியதுடன், ஆரம்பக் கட்டமாக அன்றைய தினம் அதே ஆடையுடன் கடமையாற்ற அனுமதித்தது.

சுற்றுநிரூபத்தின்படியான சீருடையை அணிந்து வருவதாகக் கூறி அவகாசம் பெற்றிருந்த போதிலும், கடந்த 10 ஆம் திகதி 5 பேர் மீண்டும் சுற்றுநிரூபத்தை மீறிய ஆடையுடன் வருகை தந்தனர். இதனை அனுமதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவித்த நிலையிலேயே, வெளியே உள்ள சிலர் இச்சம்பவத்திற்கு இனவாத முத்திரை குத்தி போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் 2019.06.26 திகதிய 13/2019(1) மற்றும் 2022.09.27 திகதிய 05/2022 ஆகிய சுற்றறிக்கைகள் 2022.11.28 ஆம் திகதி அரசாங்கத்தினால் முற்றாக இரத்துச் செய்யப்பட்டு விட்டன. தற்போது 1989.02.01 ஆம் திகதிய 8/89 இலக்க அரச சுற்றுநிரூபம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே வைத்தியசாலை நிர்வாகம் சட்டப்பூர்வமாகச் செயற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கருதும் தரப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ள நிலையில், இச்சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் தேவையற்ற இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர்.”

எனவே, பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு கலவரத்தைத் தூண்ட முற்படும் நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) பாதுகாப்புத் தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ் இளைஞர் சேனை, இனவாதக் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக விரைவில் பொலிஸ் நிலையங்களில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Screenshot
Screenshot
Screenshot
You might also like

Leave A Reply

Your email address will not be published.