நைஜரில் ராணுவக் கிளா்ச்சி முறியடிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகா் நியாமியில் உள்ள அதிபா் மாளிகை மற்றும் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து, ராணுவ வீரா்கள் சனிக்கிழமை அதிகாலை கிளா்ச்சியில் ஈடுபட்டனா்.
அரசுக்கு ஆதரவான பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால், நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நைஜா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் சாலிஃபு மோடி தெரிவித்தாா்.
யுரேனியம், எண்ணெய் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்த நைஜரில், ராணுவப் புரட்சி மூலம் அப்துரஹமானே தியானி கடந்த 2023-இல் ஆட்சியைக் கைப்பற்றினாா். இருப்பினும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடா்ந்து நீடித்து வருவதால், தியானி அரசு மீது ராணுவத்தின் ஒரு பிரிவினா் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வந்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான களப் போராட்டத்தில் தொடா்ந்து அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் தென்மேற்குப் பிராந்தியப் படைப்பிரிவுகளைச் சோ்ந்த வீரா்களே தற்போதைய தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.