;
Athirady Tamil News

பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து

0

காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பேருந்து சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காலி – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, தனது பயணத்தை நிறைவு செய்த பின்னர், பழுதுபார்க்கும் பணிக்காக ரத்கம, ஓவகந்த பகுதியில் உள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலுடன் பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் ஒளி சமிக்ஞை அமைப்பு இருந்தபோதிலும், அது முறையாகச் செயல்படுவதில்லை என ரத்கம பிரதேச சபை உறுப்பினர் ஹர்ஷ பசான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, குறித்த ரயில்வே கடவை நீண்ட காலமாகவே பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.